search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வந்தே பாரத் ரெயில்"

    • கோடை விடுமுறை என்பதாலும் பயணிகளின் வசதிக்காகவும் வந்தே பாரத் சிறப்பு ரெயில்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • வந்தே பாரத் ரெயில் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இயக்கப்படும்.

    சென்னை:

    பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் தெற்கு ரெயில்வே சார்பில் பல்வேறு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், வந்தே பாரத் சிறப்பு ரெயில்கள் பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது. எனவே, பல்வேறு வந்தே பாரத் சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

    அந்த வகையில், சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே வாரந்திர வந்தே பாரத் சிறப்பு ரெயில்கள் மற்றும் வாரத்தில் 3 நாள் மட்டும் இயக்கும் வகையில் வந்தே பாரத் சிறப்பு ரெயில்கள் என தெற்கு ரெயில்வே சார்பில் ஏற்கனவே இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கோடை விடுமுறை என்பதாலும் பயணிகளின் வசதிக்காவும் இந்த வந்தே பாரத் சிறப்பு ரெயில்கள் நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை எழும்பூரில் இருந்து வரும் மே 2, 9, 16, 23, 30 மற்றும் ஜூன் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) காலை 5.15 மணிக்கு புறப்பட்டு செல்லும் வாராந்திர வந்தே பாரத் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06067) அதேநாள் மதியம் 2.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமாா்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து இதே தேதிகளில் மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு வரும் வாராந்திர வந்தே பாரத் சிறப்பு ரெயில் (06068) அதேநாள் இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

    இதேபோல, சென்னை எழும்பூரில் இருந்து வரும் மே 3, 4, 5, 10, 11, 12, 17, 18, 19, 24, 25, 26,31 மற்றும் ஜூன் 1, 2, 7, 8, 9, 14, 15, 16, 21, 22, 23, 28, 29, 30 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) காலை 5.15 மணிக்கு புறப்பட்டு செல்லும் வந்தே பாரத் சிறப்பு ரெயில் (06057) அதேநாள் மதியம் 2.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கமாக, இதே தேதிகளில் நாகர்கோவில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு வரும் வந்தே பாரத் சிறப்பு ரெயில் (06058) அதேநாள் இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். இந்த ரெயில் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நபரால் ரெயிலில் இருந்து இறங்க முடியாத நிலையில் அவரும் மனைவியுடன் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
    • பயனர்கள் பலரும் கேலியான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    வந்தே பாரத் ரெயிலில் மனைவியை வழியனுப்ப சென்ற கணவர் அந்த ரெயிலில் தானியங்கி கதவுகள் எதிர்பாராதவிதமாக மூடப்பட்டதால் ரெயிலுக்குள் சிக்கி மனைவியுடன் பயணம் செய்த சம்பவத்தை அவரது மகள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    குஜராத் மாநிலம் வதோதரா பகுதியை சேர்ந்த கோஷா என்ற அந்த இளம்பெண் தனது தாயுடன் மும்பை செல்வதற்காக வந்தே பாரத் ரெயிலில் ஏறுவதற்கு சென்றுள்ளார். அவர்களை வழியனுப்புவதற்காக கோஷாவின் தந்தை 2 பெரிய பைகளுடன் ரெயில் நிலையத்துக்கு சென்றுள்ளார். பயணத்திட்டப்படி ரெயில் வந்ததும் 2 பைகளையும் பெட்டிக்குள் வைப்பதற்காக கோஷாவின் தந்தை சென்ற நேரத்தில் தானியங்கி கதவு மூடியது.

    இதனால் அந்த நபரால் ரெயிலில் இருந்து இறங்க முடியாத நிலையில் அவரும் மனைவியுடன் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த நேரத்தில் டிக்கெட் பரிசோதகரை அணுகிய போது, ஏற்கனவே நேரமாகி விட்டதாக கூறியதோடு, ரெயிலும் வேகம் பிடித்து விட்டதால் ஒன்றும் செய்ய முடியாது என கூறி உள்ளார்.

    இதனால் கோஷாவின் தந்தையும் மனைவியுடன் பயணம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவரது மகளின் பதிவுகள் இணையத்தில் வைரலான நிலையில், பயனர்கள் பலரும் கேலியான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • வீடியோ 6 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றது.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பெண்களின் செயலை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.

    சென்னையில் இருந்து மைசூரு சென்ற வந்தே பாரத் ரெயிலில் பெண்கள் குழுவினர் பாட்டு பாடும் வீடியோ தெற்கு ரெயில்வேயின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

    'மகிழ்ச்சியின் சிம்பொனி' என்ற தலைப்பில் பகிரப்பட்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதில், 12 பெண்கள் சேர்ந்து ஒரு பாடலை பாடுகின்றனர். அதில் ஒரு சிலர் அவ்வப்போது தங்கள் மொபைலில் பாடல் வரிகளை பார்த்து பாடுவது போன்று காட்சிகள் இருந்தது.

    இந்த வீடியோ 6 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பெண்களின் செயலை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர். ஒரு பயனர், பொது இடத்தில் தொல்லை கொடுக்கும் இது போன்ற பயணிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக நீங்கள் ஏன் ஊக்குவிக்கிறீர்கள் என பதிவிட்டுள்ளார். இதே போன்று பல பயனர்களும் ஆவேசமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • சென்னை- பெங்களூர்- மைசூர் இடையே, இப்போது 2-வது வந்தே பாரத் ரெயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
    • தென்னிந்திய ரெயில்வே-ன் இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்

    சென்னை- பெங்களூர்- மைசூர் இடையே ஏற்கனவே ஒரு வந்தே பாரத் இயக்கப்படும் நிலையில், இப்போது 2-வது வந்தே பாரத் ரெயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த ரெயில் புதன்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த ரெயில் தொடங்கப் பட்ட பிறகு சென்னையில் இருந்து பெங்களூருக்கு காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் வந்தே பாரத் ரெயில் சேவை கிடைக்கும். இதன் மூலம் பயணிகள் சென்னையில் இருந்து 4.25 மணி நேரத்தில் பெங்களூர் செல்லலாம்.

    இந்த புதிய சென்னை-மைசூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் ஒரு பயணி "மலர்கள் கேட்டேன்" பாடலைப் பாடி மகிழ, அவரது தோழி நாட்டியக் குறிப்புகளுடன் அசைவுகள் கொடுக்கும் வீடியோ ஒன்றை தென்னிந்திய ரெயில்வே தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

    தென்னிந்திய ரெயில்வே-ன் இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    பேருந்து, ரெயில், மெட்ரோவில் பயணம் செய்யும் போது கூட சக பயணிகளுக்கு தொந்தரவு கொடுக்காமல் ஹெட் செட் அணிந்து பாடல் கேட்கவும் என பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

    இந்நிலையில் வந்தே பாரத் ரெயிலில் கர்நாடக இசை பாடல் பாடுவது பிற பயணிகளுக்கு தொந்தரவு கொடுக்காதா? இதே போல கிராமிய, கானா பாடல்களை பாட ரெயில்வே நிர்வாகம் அனுமதிக்குமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    • 10 வழித்தடங்களில் புதிய வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
    • திருவனந்தபுரம்-காசா்கோடு வந்தே பாரத் ரெயில் சேவையை மங்களூரு வரை நீட்டிக்கும் நிகழ்வையும் தொடங்கி வைத்தார்.

    சென்னை:

    சென்னை-மைசூரு இடையே மேலும் ஒரு வந்தே பாரத் ரெயில் உள்பட நாடு முழுவதும் 10 வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமா் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

    நாடு முழுவதும் ரூ.85 ஆயிரம் கோடிக்கு அதிகமான ரெயில்வே திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் இன்று காலை தொடங்கி வைத்தார்.

    இதன்படி, தெற்கு ரெயில்வேயில் சென்னை-மைசூரு இடையே கூடுதலாக ஒரு புதிய வந்தே பாரத் ரெயில், லக்னோ-டேராடூன், கலபுா்கி-பெங்களூரு, ராஞ்சி-வாரணாசி, டெல்லி (நிஜாமுதீன்)-கஜுரஹோ, செகந்திராபாத்-விசாகப்பட்டினம், நியூ ஜல்பைகுரி-பாட்னா, லக்னோ-பாட்னா, அகமதாபாத்-மும்பை, பூரி-விசாகப்பட்டினம் என மொத்தம் 10 வழித்தடங்களில் புதிய வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார்.

    சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறும் சென்னை-மைசூரு இடையேயான 2-வது வந்தே பாரத் ரெயில் தொடக்க விழாவில் கவர்னர் ஆா்.என்.ரவி, மத்திய இணை-மந்திரி எல்.முருகன் ஆகியோா் கலந்து கொண்டனர்.

    வாரந்தோறும் புதன்கிழமை தவிர தினசரி காலை 6 மணிக்கு மைசூருவிலிருந்து புறப்படும் இந்த வந்தே பாரத் ரெயில்(எண்:20663), பிற்பகல் 12.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்தடையும். மீண்டும் மறுமாா்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் (எண்:20664), சென்ட்ரல், காட்பாடி, ஜோலாா்பேட்டை, கிருஷ்ண ராஜபுரம், மாண்டியா வழியாக இரவு 11.20-க்கு மைசூரு சென்றடையும்.

    திருவனந்தபுரம்-காசா்கோடு வந்தே பாரத் ரெயில் சேவையை மங்களூரு வரை நீட்டிக்கும் நிகழ்வையும் தொடங்கி வைத்தார்.

    இதுதவிர, கொல்லம்-திருப்பதி விரைவு ரெயில் சேவையைத் தொடங்கி வைக்கும் அவா், பேசின்பாலத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பிட் லைனை நாட்டுக்கு அா்ப்பணித்தார். மேலும், சிங்கப்பெருமாள் கோவில், கங்கைகொண்டான், தேனி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, வள்ளியூா் ஆகிய 6 ஊா்களில் அமைக்கப்பட்டுள்ள சரக்கு முனையத்தையும் நாட்டுக்கு அா்ப்பணித்தார். திண்டுக்கல், ஈரோடு, திருச்சி, பாலக்காடு ஆகிய ரெயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள மலிவுவிலை மருந்தகங்களையும், 168 ரெயில் நிலையங்களில் 'ஒரு நிலையம் ஒரு பொருள்' (விற்பனை) அரங்குகளையும் திறந்து வைத்தார்.

    இதுதவிர, பல்வேறு திட்டப் பணிகளையும் தொடங்கி வைத்தார்.


    • வந்தே பாரத் ரெயிலின் டிக்கெட், இப்போது இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலின் டிக்கெட் விலைக்கு இணையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
    • ரெயில் புதன்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை-பெங்களூர்- மைசூர் வழித்தடத்தில் ரெயில் பயணிகள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதனால் 2-வது வந்தே பாரத் ரெயிலை தெற்கு ரெயில்வே அறிமுகப்படுத்தி உள்ளது. இப்போது இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் சென்னையில் இருந்து காலையில் புறப்பட்டு மதியம் மைசூரை அடையும். ஆனால், இப்போது அறிமுகப்ப டுத்தப்படும் வந்தே பாரத் ரெயில் காலையில் மைசூரில் இருந்து கிளம்பி, மதியம் சென்னை வந்தடையும். இந்த வந்தே பாரத் ரெயிலின் டிக்கெட், இப்போது இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலின் டிக்கெட் விலைக்கு இணையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

    மைசூரில் இருந்து புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் இந்த வந்தே பாரத் ரெயில் மாண்டியா, எஸ்எம்விடி பெங்களூர், கிருஷ்ணராஜபுரம், ஜோலார்பேட்டை, காட்பாடி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    மைசூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த வந்தே பாரத் ரெயில் காலை 7.45 மணிக்கு பெங்களூர் வரும். மதியம் 12.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். மறு மார்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில், இரவு 9.25 மணிக்கு பெங்களூர் சென்றடையும். இரவு 11.20 மணிக்கு மைசூர் செல்லும்.

    சென்னை- பெங்களூர்- மைசூர் இடையே ஏற்கனவே ஒரு வந்தே பாரத் இயக்கப்படும் நிலையில், இப்போது 2-வது வந்தே பாரத் ரெயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை பிரதமர் மோடி வருகிற 12-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். இந்த ரெயில் புதன்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த ரெயில் தொடங்கப் பட்ட பிறகு சென்னையில் இருந்து பெங்களூருக்கு காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் வந்தே பாரத் ரெயில் சேவை கிடைக்கும். இதன் மூலம் பயணிகள் சென்னையில் இருந்து 4.25 மணி நேரத்தில் பெங்களூர் செல்லலாம்.

    • தற்போது உள்ள வந்தே பாரத் ரெயிலை விட புதிதாக விடப்போகும் வந்தே பாரத் ரெயிலில் சில கூடுதல் வசதிகள் இடம் பெறுகின்றன.
    • ரெயிலுக்கான கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    சென்னை:

    நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இருந்து கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு இயக்கப்படுகிறது.

    சென்னையில் இருந்து பெங்களூருக்கு தற்போது வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மைசூரு வரை சென்று வருகிறது.

    தமிழக-கர்நாடக மாநில தலைநகரங்களுக்கு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில்களுக்கு பயணிகள் இடையே மிகுந்த வரவேற்பு உள்ளது. சென்னை-பெங்களூரு இடையே உள்ள 362 கி.மீ.தூரத்தை 4 மணி நேரம் 20 நிமிடங்களில் சென்றடைகிறது.

    சதாப்தி எக்ஸ்பிரஸ் 4 மணி நேரம் 40 நிமிடங்களில் செல்கிறது. வந்தே பாரத் ரெயிலில் பயணிகள் கூட்டம் எப்போதும் அதிகமாக இருப்பதால் இந்த வழித்தடத்தில் மேலும் ஒரு வந்தே பாரத் ரெயிலை இயக்க தெற்கு ரெயில்வே திட்டமிட்டுள்ளது.

    தற்போது உள்ள வந்தே பாரத் ரெயிலை விட புதிதாக விடப்போகும் வந்தே பாரத் ரெயிலில் சில கூடுதல் வசதிகள் இடம் பெறுகின்றன. வெள்ளை மற்றும் நீல கலரில் தற்போது ஓடும் வந்தே பாரத் ரெயிலுக்கு பதிலாக 'ஆரஞ்சு' மற்றும் 'கிரே' கலரில் வெளிவருகிறது.

    பிரதமர் நரேந்திர மோடி புதிய வந்தே பாரத் ரெயிலை வருகிற 12-ந்தேதி தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் திருவனந்தபுரம்-காசர்கோடு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலை மங்களூரு வரை நீட்டிப்பு செய்து சேவையை தொடங்கி வைக்கிறார். இது தவிர தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பல்வேறு முக்கிய ரெயில்வே திட்டப் பணிகளையும் தொடங்கி வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    புதிய வந்தே பாரத் ரெயிலில் இருக்கைகள் மேலும் சொகுசாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எக்சிகியூடிவ் சேர் காரில் பயணிகள் கால் வைப்பதற்கான வசதி விரிவாக்கம் செய்யப்படுகிறது. புதிய வந்தே பாரத் ரெயிலை பெங்களூரில் பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்று கூறப்படுகிறது.

    இந்த ரெயிலுக்கான கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • சென்னை - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரெயில் இரு மார்க்கங்களிலும் நாளை ரத்து செய்யப்படுகிறது.
    • பல்வேறு ரெயில்கள் வேறு மார்க்கமாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    * விழுப்புரம் - திருச்சி இடையே நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக நாளை 6 ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    * சென்னை - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரெயில் இரு மார்க்கங்களிலும் நாளை ரத்து செய்யப்படுகிறது.

    * விருத்தாசலம் - திருச்சி, திருப்பாதிரிப்புலியூர் - திருச்சி, திண்டுக்கல் - விழுப்புரம் ரெயில்களும் நாளை ரத்து செய்யப்படுகிறது.

    * மேலும் பல்வேறு ரெயில்கள் வேறு மார்க்கமாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நெல்லை-சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
    • ரெயிலில் உள்ள 6 பெட்டிகளில் கண்ணாடிகள் சேதமடைந்தது.

    நெல்லை:

    நெல்லை-சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த ரெயில் நெல்லையில் இருந்து வழக்கம்போல் நேற்று காலை 6 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்றுவிட்டு பின்னர் மதியம் 2.50 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு நெல்லைக்கு வந்து கொண்டிருந்தது.

    இந்நிலையில் இரவு 10 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே வாஞ்சி மணியாச்சிக்கும், நாரைக்கிணறுக்கும் இடையே வந்தே பாரத் ரெயில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது அங்குள்ள காட்டுப்பகுதியில் மறைந்திருந்த மர்ம நபர்கள் சிலர் ரெயில் பெட்டிகளின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் ரெயிலில் உள்ள 6 பெட்டிகளில் கண்ணாடிகள் சேதமடைந்தது.

    உடனே பெட்டிகளில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். எனினும் ரெயில் வேகமாக வந்ததால் சிறிது நேரத்தில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தை வந்தடைந்தது.

    இதுகுறித்து நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையிலான போலீசார் நடைமேடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வந்தே பாரத் ரெயில்பெட்டிகளை ஆய்வு செய்தனர்.


    அதில் 6 பெட்டிகளின் இடது புறங்களில் சுமார் 9 இடங்களில் கண்ணாடிகள் விரிசல் ஏற்பட்டு சேதம் அடைந்திருந்தது.இதுதொடர்பாக நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ரெயிலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். ஆனால் அதில் மர்ம நபர்கள் உருவம் எதுவும் பதிவாகவில்லை.

    தொடர்ந்து சேதம் அடைந்த ரெயில் பெட்டிகளில் பயணித்த பயணிகளிடம் அவர்கள் விசாரித்தனர். அப்போது நாரைக்கிணறு பகுதியில் வைத்து இந்த கல்வீச்சு சம்பவம் நடைபெற்றது தெரியவந்தது.

    இதையடுத்து அங்கு சென்று ஆய்வு செய்தனர். மர்ம நபர்கள் யாரேனும் அந்த பகுதியில் பதுங்கி உள்ளார்களா? என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

    சம்பவ இடம் முட்புதர்கள் நிறைந்த காட்டுப்பகுதியாக இருந்தது. மேலும் அந்த இடத்தில் மதுபாட்டில்கள் உள்ளிட்டவையும் கிடந்ததாக கூறப்படுகிறது. இதனால் மதுபோதையில் கும்பல் ஏதேனும் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாமா? அந்த கும்பல் யார்? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே இன்று காலை 6 மணிக்கு வழக்கம் போல் வந்தே பாரத் ரெயில் மீண்டும் தனது இயக்கத்தை தொடங்கி சென்னைக்கு புறப்பட்டு சென்றது.

    • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரு மார்க்கங்களிலும் இயக்கப்படுகிறது.
    • சென்னையில் இருந்து காலை 5 மணிக்கு புறப்படுகிறது.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு நகரங்களுக்கு பயணிகள் வசதிகளுக்காக தென்னக ரெயில்வே சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது.

    அந்த வகையில் சென்னை- நாகர்கோவில் இடையே இரு மார்க்கங்களிலும் வந்தே பாரத் சிறப்பு ரெயில் இன்றும் நாளையும் (13 மற்றும் 14-ந்தேதி) இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை எழும்பூரில் இருந்து காலை 5 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில் மதியம் 1.45 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

    நாகர்கோவிலில் மதியம் 2.25 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில் இரவு 11.35 மணிக்கு சென்னை வந்தடையும்.

    • பயணிகள் தங்களின் போக்குவரத்துக்காக பேருந்துகளும், ரெயில்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
    • மறு மார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.25 மணிக்கும் இயக்க முடிவு.

    பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

    பயணிகள் தங்களின் போக்குவரத்துக்காக பேருந்துகளும், ரெயில்களும் பயன்படுத்தி வருகின்றனர்.

    இதனால், பயணிகளின் வசதிக்காக சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்தே பாரத் சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, வந்தே பாரத் ரெயில் சென்னை எழும்பூரில் இருந்து நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தேதிகளில் காலை 5 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறு மார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.25 மணிக்கும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    • சென்னை- திருநெல்வேலி வந்தே பாரத் ரெயில் அறிவிக்கப்பட்ட தருணத்திலேயே இந்த ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தேன்.
    • மத்திய ரெயில்வே துறை அமைச்சர் மற்றும் ரெயில்வே உயர் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்தினேன்.

    கன்னியாகுமரி:

    குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    நாகர்கோவில் நகருக்கு முதன் முறையாக வருகை தந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை இன்று ரெயில் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினருடன் இணைந்து வரவேற்றேன்.

    சென்னை- திருநெல்வேலி வந்தே பாரத் ரெயில் அறிவிக்கப்பட்ட தருணத்திலேயே இந்த ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தேன்.

    மத்திய ரெயில்வே துறை அமைச்சர் மற்றும் ரெயில்வே உயர் அதிகாரிகளை சந்தித்து இந்த கோரிக்கையை வலியுறுத்தினேன். தொடர் முயற்சிகளின் பலனாக இன்று வந்தே பாரத் ரெயில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்தடைந்தது.

    கன்னியாகுமரி மாவட்ட மக்கள் சார்பாக அனைவருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

    ×